குழந்தை கடத்தப்பட்டதாக நினைத்து பெற்றோர் போலீசில் புகார்


குழந்தை கடத்தப்பட்டதாக நினைத்து பெற்றோர் போலீசில் புகார்
x

பெங்களூருவில், வீட்டில் குழந்தை தூங்கிய நிலையில் கடத்தப்பட்டதாக நினைத்து போலீசில் தம்பதி புகார் அளித்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு :-

கடத்தல் புகார்

பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே ஜனதா காலனி பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அந்த தம்பதி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சிறுமி மட்டும் வீட்டின் முன்பு தனியாக விளையாடினாள். இதற்கிடையே வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானாள்.

இதுபற்றி அறிந்ததும் தம்பதி அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அந்த பகுதியில் மகளை தேடினர். ஆனால் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் பயந்துபோன தம்பதி, கே.ஆர்.புரம் போலீசில் மகளை காணவில்லை எனவும், மர்மநபர்கள் கடத்தி சென்றுவிட்டதாகவும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வீட்டில் குழந்தை...

மேலும் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து குழந்தையை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குழந்தை விளையாடிய இடம் மற்றும் வீட்டிற்குள் தேடினர். அப்போது வீட்டின் ஒரு அறையில் குழந்தை அயர்ந்து தூங்கி கொண்டிருந்தது. மேலும் குழந்தையின் மேல் சில ஆடைகள் கிடந்தது. இதுகுறித்து தம்பதியிடம் போலீசார் கேட்டனர்.

அப்போது குழந்தை விளையாடிய நிலையில், வீட்டின் வெளியே கிடந்த ஆடைகளை எடுத்து வந்து கட்டிலில் போட்டதாக குழந்தையின் தாய் கூறினார். அப்போது தான் குழந்தை தூங்கி கொண்டிருந்தது தெரியாமல், ஆடைகளை குழந்தை மீது போட்டதும், அதுதெரியாமல் ஊர் முழுவதும் குழந்தையை தேடி அலைந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார், குழந்தையின் பெற்றோருக்கு சில அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர்.


Next Story