மந்திரி பதவி வழங்குவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் யு.டி.காதர் பேட்டி
மந்திரி பதவி வழங்குவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என யு.டி.காதர் கூறினார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் உல்லாலில் நிருபர்களுக்கு பேட்டியளித்த யு.டி.காதர் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
கர்நாடகத்தில் 90 சதவீத மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் பெற்றுள்ளது. கடந்த முறை பா.ஜனதாவின் பொய் பிரசாரத்தில் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த முறை மக்கள் சரியான முடிவை எடுத்துள்ளனர். பா.ஜனதாவை புறம் தள்ளிவிட்டு, காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்துள்ளனர். 2013-ம் ஆண்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி எனக்கு எதிராக நின்றது. இருப்பினும் நான் வெற்றி பெற்றேன். தட்சிண கன்னடா மாவட்டத்தில் மத நல்லிணக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மந்திரி பதவி, துணை முதல்-மந்திரி பதவி குறித்து, கட்சி மேலிடம் தான் முடிவு எடுக்கும். நான் ஒருபோதும் எனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்று கூறவில்லை.
இதற்கு முன்பு மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதை சிறப்பாக செய்து முடித்தேன். இந்த முறை மந்திரி பதவி கிடைக்கும் என்று நம்புகிறேன். இதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்கள் மற்றும் நிதிகள் எல்லாம் நம்முடைய வரிப்பணம்தான். இருப்பினும் பா.ஜனதா பாரபட்சம் காட்டியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருந்த தொகுதிகளுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கியது. ரமாநாத்ராய் நேர்மையான அரசியல் வாதி. மூத்த தலைவர். மக்களின் ஆதரவு அவருக்கு தொடர்ந்து இருந்தது. அவரை தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற விடமாட்டோம். ஹிஜாப் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. கோர்ட்டு நல்ல தீர்ப்பு கொடுக்கும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.