வாகன ஓட்டிகளை எச்சரிக்க 'சைரன் ஒலி' வைக்க திட்டம்


வாகன ஓட்டிகளை எச்சரிக்க சைரன் ஒலி வைக்க திட்டம்
x

பெங்களூருவில் சுரங்க பாதையில் மழைநீர் தேங்கினால் வாகன ஓட்டிகளை எச்சரிக்க ரூ.5 கோடியில் சைரன் ஒலி வைக்கும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பெங்களூரு:-

பெண் என்ஜினீயர் சாவு

பெங்களூருவில் கடந்த 22-ந் தேதி மாலையில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்திருந்தது. இதனால் நகரையே மழை புரட்டி போட்டு இருந்தது. 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்திருந்தது. அதே நேரத்தில் விதானசவுதா அருகே கே.ஆர்.சர்க்கிளில் உள்ள சுரங்க பாதையில் சென்ற கார் மழைநீரில்

சிக்கி மூழ்கியது. இதில், ஒரு பெண் என்ஜினீயர் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சுரங்க பாதைக்குள் மழைநீர் தேங்கி பெண் என்ஜினீயர் பலியாகி இருந்ததால், நகரில் உள்ள பாதுகாப்பாற்ற சுரங்க பாதைகள் குறித்து ஆய்வு நடத்தியது. அதன்படி, பெங்களூருவில் ரெயில்வே சுரங்க பாதைகளுடன் சேர்த்து 53 சுரங்க பாதைகள் உள்ளன. அவற்றில் 18 சுரங்க பாதைகள் அபாயகரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சைரன் ஒலி வைக்க திட்டம்

இந்த நிலையில், சுரங்க பாதையில் மழைநீர் தேங்கினால், அதுபற்றி வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக சைரன் ஒலி வைக்கும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.5 கோடியில் அந்த திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்திருக்கிறது. அதாவது மழை பெய்யும் போது சுரங்க பாதையில் 1½ அடிக்கு மேல் மழைநீர் தேங்கி நின்றால், அந்த சுரங்க பாதையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டாம் என்று சைரன் ஒலிக்கும்.

அவ்வாறு சைரன் ஒலிக்கும் பட்சத்தில் வாகன ஓட்டிகள் அந்த சுரங்க பாதையை பயன்படுத்தாமல் இருப்பதால், தேவையில்லாமல் வாகனங்கள் தண்ணீரில் மூழ்குவது மற்றும் உயிர் இழப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள். அத்துடன் 1½ கோடிக்கு சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்பது பற்றிய தகவல்களும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு செல்லும்படியாக இந்த திட்டத்தை செயல்படுத்தவும் மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்ற தகவல் எதுவும் இல்லை.


Next Story