மோசடி வழக்கில் சிக்கிய சைத்ரா உள்பட 6 பேரின் போலீஸ் காவல் இன்று நிறைவு


மோசடி வழக்கில் சிக்கிய சைத்ரா உள்பட 6 பேரின் போலீஸ் காவல் இன்று நிறைவு
x

தொழில்அதிபரிடம் ரூ.5 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கில் கைதான சைத்ரா உள்பட 6 பேரின் போலீஸ் காவல் இன்று (சனிக்கிழமை) நிறைவு பெறுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீசு அனுப்பியுள்ளனர்.

பெங்களூரு:-

ரூ.5 கோடி மோசடி

உடுப்பி மாவட்டம் பைந்தூரை சேர்ந்த தொழில்அதிபர் கோவிந்தபாபு பூஜாரி. இவருக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.5 கோடி பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக விசாரித்து வரும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்து அமைப்பை சேர்ந்த பெண் பிரமுகர் சைத்ரா குந்தாப்புரா, பா.ஜனதா பிரமுகர் ககன் கடூரு, மடாதிபதி அபினவ காலஸ்ரீ உள்பட 8 பேரை கைது செய்துள்ளனர். அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கைதான 8 பேரும் கோவிந்தபாபுவுக்கு பா.ஜனதா சார்பில் போட்டியிட எம்.எல்.ஏ. சீட் வாங்கி கொடுப்பதாக கூறி திட்டமிட்டு ரூ.5 கோடியை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் இருந்து இதுவரை ரூ.2½ கோடிக்கு நகை, பணம் பறிமுதல்

செய்யப்பட்டுள்ளது. மீதி பணத்தில் சைத்ரா, மடாதிபதி, ககன் கடூரு சொத்துகள் வாங்கியது தெரியவந்துள்ளதால், அவற்றை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மூளையாக செயல்பட்ட 3 பேர்

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், இந்த மோசடியில் சைத்ரா, ககன் கடூரு, மடாதிபதி ஆகிய 3 பேர் தான் மூளையாக செயல்பட்டதும், மற்ற 5 பேரும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் போல் நடித்து உதவி செய்ததும் தெரியவந்துள்ளது. இவர்களில் சைத்ரா, ககன் கடூரு, மடாதிபதியிடம் விசாரித்து போலீசார் சில தகவல்களை பெற்றுள்ளனர். இந்த நிலையில், சைத்ரா, ககன் கடூரு உள்பட 6 பேரின் போலீஸ் காவல் இன்றுடன் (சனிக்கிழமை) நிறைவு

பெறுகிறது. இந்தநிலையில் இவர்களில் சைத்ரா, ககன் கடூரு ஆகிய 2 பேரை மட்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் 2 பேரையும் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரர் பிரமுகருக்கு நோட்டீஸ்

இதற்கிடையில், ரூ.5 கோடி மோசடி குறித்து வழக்குப்பதிவாகும் முன்பாகவே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமண் சில தகவல்களை வெளியிட்டு இருந்தார். இதனால் அவரிடம் மோசடி பற்றிய கூடுதல் தகவல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமணை விசாரணைக்கு ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர்.

உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபரிடம் ரூ.5 கோடி மோசடி செய்ததாக இந்து அமைப்பு பெண் பிரமுகர் சைத்தா, மடாதிபதி அபினவ ஹலஸ்ரீ பல கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தேர்தல் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதாக கூறி சஞ்சய் என்ற அரசு அதிகாரி ஒருவரிடம் மடாதிபதி அபின ஹலஸ்ரீ ரூ.1 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் அந்த அரசு அதிகாரி சிராஹட்டி தாலுகா ஹெப்பால் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு சட்டசபை தேர்தலில் சிராஹட்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக கூறி, மடாதிபதி அபினவ ஹலஸ்ரீ ரூ.1 கோடி பெற்று மோசடி செய்து தெரியவந்தது. இதுகுறித்து முன்டரகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story