ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை


ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
x

சிவமொக்காவில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் 82 பேரை பிடித்து எச்சரித்து அனுப்பினர்.

சிவமொக்கா-

ரவுடிகள் வீடுகளில் சோதனை

சிவமொக்கா நகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி பழைய ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களிடம் அவ்வப்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்து வந்தனர். இந்நிலையில் நேற்று சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தொட்டப்பேட்டை, வினோபாநகர், கோட்டை, ஜெயநகர், துங்காநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

குறிப்பாக குற்றப்பின்னணி உள்ளவர்கள், பழைய ரவுடிகளின் வீடுகளில் இந்த சோதனை நடந்தது. அப்போது பிடிப்பட்ட ரவுடிகளை போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்தனர். அதன்படி 82 ரவுடிகளை போலீசார் மடக்கி பிடித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரையும் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சிறப்பு காவல்படை மைதானத்துக்கு அழைத்து வந்து போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார் முன்பு ஆஜர்படுத்தினர்.

ரவுடிகளுக்கு எச்சரிக்கை

அவர் அனைத்து ரவுடிகளிடமும் விசாரணை நடத்தினார். அப்போது அவர்களின் பெயர், விவரங்கள் மற்றும் தொழில், இதுவரை உள்ள குற்றப்பின்னணி, குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனரா ஆகிய தகவல்களை பெற்று கொண்டனர். பின்னர் அனைவரையும் அழைத்து எச்சரித்த போலீசார், இனி குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

மேலும் வாரத்திற்கு 2 நாட்கள் அருகாமையில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்து இடவேண்டும். இல்லையென்றால் வீடு தேடி வந்து போலீசார் கைது செய்யும் நிலை ஏற்படும் என்று எச்சரித்தனர். இதையடுத்து அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிவமொக்கா நகரப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story