தலித்துகளுக்கு ஆதரவான கட்சி பா.ஜனதா; மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி புகழாரம்
தலித்துகளுக்கு ஆதரவான கட்சி பா.ஜனதா என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி புகழ்ந்துள்ளார்.
தார்வார்;
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியதாவது:- எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசு உயர்த்தி இருப்பது வரலாற்று சிறப்பு மிக்கது. காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டவர்களை ஒரு வாக்கு வங்கியாகவே பார்க்கிறது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இதுவரை எந்த நல திட்டங்களையும் சரிவர செய்து கொடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவர்கள் செய்திருந்தால், இன்று தலித்துகள் இந்த பரிதாப நிலைக்கு தள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பா.ஜனதா தலித்துகளின் கோரிக்கையை ஏற்று இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி உள்ளது.
இதன் மூலம் தலித்துகளுக்கு ஆதரவான கட்சி பா.ஜனதா என்பது தெரியவருகிறது. பஞ்சமசாலி உள்ளிட்ட பல சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராடி வருகின்றனர். இது குறித்து முதல்-மந்திரி ஆலோசனை நடத்தி சரியான முடிவு எடுப்பார். உடனே அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை நாங்கள் தவறாக சித்தரிக்கவில்லை. மக்கள்தான் ராகுல்காந்தி மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். இதேபோல காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல்தான் அந்த கட்சி நாடு முழுவதும் ஆட்சியை இழந்தது. தற்போது காங்கிரஸ் நடத்தி வரும் ஒற்றுமைக்கான பாதயாத்திரை ராகுல்காந்தி, சித்தராமையாவின் உடல் நலத்திற்கு வேண்டும் என்றால் நல்லது. ஆனால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.