ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக திட்டம் போட்டு தந்தையை கொன்ற மகன்
மத்திய பிரதேசத்தில் ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக திட்டம் போட்டு தந்தையை மகன் கொன்ற அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தில் சேந்த்வா நகரில் அம்பேத்கார் காலனியில் வசித்து வந்தவர் சகன் பவார் (வயது 52). திடீரென கடந்த 10-ந்தேதி சாலை விபத்தில் அவர் உயிரிழந்து விட்டார்.
இதுபற்றி சேந்த்வா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பர்வானி போலீஸ் சூப்பிரெண்டு தீபக் குமார் சுக்லா இதுபற்றி கூறும்போது, இந்த விவகாரம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சி.சி.டி.வி. காட்சி மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்ததில், இது திட்டமிட்ட கொலை என்ற சந்தேகம் எழுந்தது. தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடந்தது.
இதில், பவாரை அவரது மகன் அனில் பவார் (வயது 27) தனது நண்பர்களான பின்டு, கோலு மற்றும் கரண் ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டு படுகொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அனில் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர் என கூறியுள்ளார்.
குடும்ப விவகாரம் மற்றும் பணத்திற்காக தந்தை மற்றும் மகன் இடையே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக தந்தையை மகன் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.