கோடரியால் தாக்கி மகன் படுகொலை; போலீசில் தொழிலாளி சரண்
பெலகாவி அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் கோடரியால் தாக்கி மகனை கொன்ற தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார்.
பெங்களூரு:
குடிபோதையில் தகராறு
பெலகாவி மாவட்டம் காகவாட் தாலுகா உகார் புத்துரகா கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னப்பா கான்ஜி(வயது 61). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2-வது மகன் பெயர் சேத்தன் கான்ஜி(30). தந்தை, மகன் இருவரும் கூலித் தொழிலாளி ஆவார்கள். சேத்தனுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் அவர் மதுஅருந்திவிட்டு குடிபோதையில் சென்னப்பா மற்றும் தாயுடன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் சரியாக வேலைக்கு செல்லாமல் மதுஅருந்த பணம் கேட்டு தனது தாயையும் சேத்தன் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினமும் சேத்தன் மதுஅருந்தி விட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த தந்தை சென்னப்பா மற்றும் தாயுடன் அவர் சண்டை போட்டுள்ளார். மதுஅருந்த பணம் கொடுக்கும்படி தாயுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
மகனை கொன்ற தந்தை
இதனால் ஆத்திரமடைந்த சென்னப்பா வீட்டில் கிடந்த கோடரியை எடுத்து பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் சேத்தனை தாக்கியதாக தெரிகிறது. இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். பின்னர் காகவாட் போலீஸ் நிலையத்திற்கு சென்ற சென்னப்பா, தனது மகனை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று சேத்தனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். குடிபோதையில் சண்டை போட்டதுடன், மதுஅருந்த பணம் கேட்டு தாயுடன் தகராறு செய்ததால் சேத்தனை சென்னப்பா கொலை செய்தது தெரியவந்துள்ளது. கைதான சென்னப்பா மீது காகவாட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.