நிலவின் அருகே சந்திரயான் - 3: நீள்வட்ட சுற்றுப்பாதை உயரத்தை குறைக்கும் பணி வெற்றி - வீடியோ வெளியிட்ட இஸ்ரோ...!
நீள்வட்ட சுற்றுப்பாதை அளவு குறைக்கப்பட்டு சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் அருகே கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா,
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ம் தேதி எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
பின்னர், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத்தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து கடந்த 1-ம் தேதி புவி வட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த சந்திரயான் -3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. இதன் முக்கிய கட்டமாக கடந்த 5-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான் - 3 விண்கலம் நுழைந்தது.
நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலம், அதிகபட்சம் 18 ஆயிரம் கிலோ மீட்டராகவும், குறைந்தபட்சம் 100 கிலோ மீட்டர் என்ற அளவில் நிலவு சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது.
இந்நிலையில், சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரத்தை குறைக்கும் முதற்கட்டப்பணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் அருகே சென்றுள்ளது.
அடுத்தகட்டமாக சுற்றுவட்டப்பாதை உயரத்தை குறைக்கும் பணி வரும் 9ம் தேதி மதியம் 1 மணி முதல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் அருகே சுற்றி வரும் வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரயான் - 3 விண்கலத்தை வரும் 23ம் தேதி நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.