விவாகரத்துக்கு மறுத்த மனைவியின் வீட்டுமுன் மாந்திரீக பூஜை செய்த வாலிபர்; போலீசில் புகார்
சிவமொக்காவில் விவாகரத்துக்கு மறுத்த மனைவியின் வீட்டுமுன் மாந்திரீக பூஜை செய்த வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவமொக்கா;
சிவமொக்கா மாவட்டம் துங்கா நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 27 வயது இளம்பெண். இவர் தனியார் பள்ளி ஒன்றில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது.
ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் விவாகரத்து கோரி அந்த வாலிபர் சிவமொக்கா குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் விவாகரத்து கொடுக்க இந்தி ஆசிரியை மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், தனது மனைவியான இந்தி ஆசிரியையின் வீட்டின் முன்பு கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அன்று நள்ளிரவிலும், கடந்த 27-ந் தேதி அன்று நள்ளிரவிலும் மாந்திரீக பூஜைகள் செய்து கோழிக்கால்கள், எலுமிச்சை பழம் மற்றும் பூஜை பொருட்களை வீசி உள்ளார்.
இதுதொடர்பான காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதைப்பார்த்து இந்தி ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுதொடர்பாக, துங்கா நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.