சாமி தரிசனத்திற்கு வந்த குமாரசாமியிடம் விளக்கம் கேட்ட கோவில் பூசாரி
பிராமணர்கள் குறித்து கூறிய கருத்துக்காக சாமி தரிசனத்திற்கு வந்த குமாரசாமியிடம் விளக்கம் அளிக்குமாறு பூசாரி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:
சிந்திக்க வேண்டும்
முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால் மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷியை முதல்-மந்திரி ஆக்க ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா சதி செய்துள்ளதாகவும், அவர் மகாத்மா காந்தியை கொன்ற கோட்டே சார்ந்த பிராமணர் பிரிவை சேர்ந்தவர் என்றும், இதுகுறித்து இங்குள்ள பெரும்பான்மை சமூகத்தினர் சிந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.
குமாரசாமியின் இந்த கருத்தால் பா.ஜனதா தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது இந்த கருத்து, வீரசைவ-லிங்காயத் சமூகத்தின் வாக்குகளில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். இதுஒருபுறம் இருக்க, பிராமணர்கள் குறித்த குமாரசாமியின் கருத்துக்கு அகில கர்நாடக பிராமண மகாசபா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சாமி தரிசனம்
குமாரசாமி நேற்று உத்தர கன்னடா மாவட்டம் கோகர்ணாவில் ஒரு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது பிராமண பூசாரி குமாரசாமியிடம், "பிராமணர்களுக்கு எதிராக நீங்கள் கூறிய கருத்தை எங்களை மிகவும் புண்படுத்தியுள்ளது. நான் இந்த கருத்தை கூறுவதால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம். உங்கள் குடும்பம் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ஒருமுறை இங்கு தேவேகவுடா வந்து சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அவர் முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் பதவி ஏற்றார். நீங்களும் முதல்-மந்திரி பதவிக்கு வந்தீர்கள். உங்களின் ஆட்சி நிர்வாகத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால்
தற்போது நீங்கள் கூறிய கருத்து எங்களை புண்படுத்தியுள்ளது. அதற்கு நீங்கள் இங்கேயே விளக்கம் அளித்துவிட்டு செல்லுங்கள்" என்றார்.
அதற்கு பதிலளித்த குமாரசாமி, "நான் பிராணர்களுக்கு எதிரானவன் இல்லை. பா.ஜனதா குறித்து தான் நான் கருத்து தெரிவித்தேன். நான் கூறிய கருத்துக்காக மக்கள் என்னை தொடர்பு கொண்டு பாராட்டுகிறார்கள். உண்மையை தான் கூறியுள்ளேன் என்று சொல்கிறார்கள். பிராமணர்கள் சிலரே என்னை பாராட்டியுள்ளனர்" என்றார். சாமி தரிசனத்திற்கு வந்த குமாரசாமியிடம் விளக்கம் அளித்துவிட்டு செல்லுமாறு பூசாரி கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.