எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி
ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
பெங்களூரு:
பெங்களூரு உத்தரஹள்ளியை சேர்ந்தவர் முனிபிரயா(வயது 57). இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் அந்த ஆலையில் உள்ள எந்திரங்களில் ஏற்படும் பழுது உள்பட சில வேலைகளை சரிசெய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வழக்கம்போல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அப்போது அவர் அங்கிருந்த ஆடை உற்பத்தி எந்திரத்தின் அருகே நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென தவறி அந்த எந்திரத்திற்குள் சிக்கினார். இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சுப்ரமணியபுரா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும், எந்திரத்தில் சிக்கி இறந்த தொழிலாளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.