சாலை வசதி இல்லாததால் காயமடைந்த விவசாயியை சிகிச்சைக்காக டோலி கட்டி தூக்கி சென்ற இளைஞர்கள்
சாலை வசதி இல்லாததால் காயமடைந்த விவசாயியை சிகிச்சைக்காக இளைஞர்கள் டோலி கட்டி தூக்கி சென்ற சம்பவம் உத்தர கன்னடாவில் நடந்துள்ளது.
பெங்களூரு:-
விவசாயி
உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா தாலுகா கெந்தகி கிராமத்தைச் சேர்ந்தவர் உமேஷ். விவசாயியான இவருக்கு கிராமத்தையொட்டிய மலைப்பகுதியில் காபித்தோட்டம் உள்ளது. இவர்களது கிராமம் அங்கோலா தாலுகாவிற்கு உட்பட்ட ஹட்டிகேரி கிராமத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவர்களது கிராமத்திற்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் உமேஷ் காபித்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கால் தவறி மலைச்சறுக்கில் விழுந்தார். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
டோலி கட்டி...
இதையடுத்து அவரை சக தொழிலாளர்கள் மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர மறுத்ததால், தாங்களே டோலி கட்டி சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் தூக்கி வந்தனர். பின்னர் ஹட்டிகேரி கிராமத்தில் இருந்து வாகனம் மூலம் அவரை கார்வாரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தற்போது அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் உமேசை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் டோலி கட்டி தூக்கி வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதைப்பார்த்த பலரும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் இந்தியாவில், இன்றளவும் சாலை வசதி இல்லாத கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று பதிவிட்டு வருகிறார்கள்.