சித்ரதுா்காவில் டி.வி.கடையில் திருட்டு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
சித்ரதுா்காவில் டி.வி.கடையில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு;
சித்ரதுர்கா டவுன் பகுதியில் டி.வி.கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் ஊழியர் நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் மர்மநபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கடையில் இருந்து டி.வி.களை திருடிவிட்டு தப்பி சென்றனர்.
இதையடுத்து நேற்று காலை கடைக்கு வந்த ஊழியர்கள் கடையின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது விற்பனைக்காக வைத்திருந்த 6 டி.வி.க்கள் திருட்டுபோய் இருந்தது. அதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
உடனே அவர்கள் இதுகுறித்து கடையின் மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் கொடுத்த புகாரின்பேரில் சித்ரதுர்கா கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.