சான்ட்ரோ ரவி வழக்கை மூடி மறைக்க சதி நடக்கிறது


சான்ட்ரோ ரவி வழக்கை மூடி மறைக்க சதி நடக்கிறது
x

சான்ட்ரோ ரவி வழக்கை மூடி மறைக்க சதி நடப்பதாக சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.

மைசூரு:-

சான்ட்ரோ ரவி

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சான்ட்ரோ ரவி, விபசார தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மந்திரிகள், அரசு அதிகாரிகளை கைக்குள் வைத்து கொண்டு பல்வேறு இடமாற்றம் உள்பட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது போக்சோ வழக்குகளும் பதிவாகி உள்ளது. அவரை தொடக்கத்திலேயே கைது செய்திருக்கலாம். ஆனால் பா.ஜனதா அரசு சான்ட்ரோ ரவி மீது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.

தற்போது சான்ட்ரோ ரவி கைதான உடன், அவரை சிறையில் அடைத்த பிறகு, சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சான்ட்ரோ ரவி வாய் திறந்தால் பா.ஜனதா மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பலர் சிக்குவார்கள். இதனால் தான் மாநில அரசு அவசர அவசரமாக அவர் மீது சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

சதி நடக்கிறது

சி.ஐ.டி. போலீசார் கர்நாடகத்தை சேர்ந்த போலீஸ் பிரிவு என்பதால், அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். சான்ட்ரோ ரவி மீதான வழக்குகளை மூடி மறைக்க சதி நடக்கிறது. அவர் மீதான வழக்குகளை பாரபட்சமின்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இதுவரை 28 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் மனதை அறிந்துள்ளோம். இந்த தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story