நடிகை ரம்யா தயாரித்த படத்தின் தலைப்புக்கு சிக்கல்


நடிகை ரம்யா தயாரித்த படத்தின் தலைப்புக்கு சிக்கல்
x
தினத்தந்தி 13 Dec 2022 2:42 AM IST (Updated: 13 Dec 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

நடிகை ரம்யா தயாரித்து உள்ள படத்தின் தலைப்புக்கு சிக்கல் எழுந்து உள்ளது.

பெங்களூரு:-

ரம்யா தயாரித்து உள்ள படம்

கன்னட திரைஉலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்யா. இவர் ரசிகர்களால் சாண்டல்வுட் குயின் என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தற்போது ஆப்பிள் பாக்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நடிகையாக இருக்கும் ரம்யா தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். இந்த நிலையில் ஆப்பிள் பாக்ஸ் நிறுவனம் சார்பில் 'சுவாதி முத்தின மலே ஹனியே' என்ற திரைப்படத்தை ரம்யா தயாரித்து வந்தார்.

அந்த படத்தின் படப்பிடிப்பும் முடிந்து உள்ளது. இந்த நிலையில் ரம்யா தயாரித்து உள்ள படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதாவது கன்னட திரை உலகில் மூத்த இயக்குனராக பணியாற்றி வருபவர் எஸ்.வி.ராஜேந்திர சிங் பாபு என்பவர், ரம்யா தயாரித்து உள்ள படத்திற்கு 'சுவாதி முத்தின மலே ஹனியே' என்ற தலைப்பை பயன்படுத்த போர்க்கொடி தூக்கி உள்ளார்.

திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம்

கடந்த 1990-ம் ஆண்டு 'பன்னட கெஜ்ஜே' என்ற படத்தை ராஜேந்திரசிங் பாபு தயாரித்து இருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் 'சுவாதி முத்தின மலே ஹனியே' என்ற வரிகள் இடம்பெற்று இருந்தது. அந்த வரிகளில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனால் 'சுவாதி முத்தின மலே ஹனியே' என்ற பெயரில் ராஜேந்திரசிங் பாபு, மறைந்த நடிகர் அம்பரீசை வைத்து படம் தயாரித்தார். ஆனால் அம்பரீஷ் இறந்ததால் அந்த படத்தின் படப்பிடிப்பு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தனது படத்தின் பெயரை ஏற்கனவே பதிவு செய்து இருப்பதாகவும், இதனால் ரம்யா தயாரித்து உள்ள படத்திற்கு தனது படத்தின் தலைப்பை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு ராஜேந்திரசிங் பாபு கடிதம் எழுதி உள்ளார். இது ரம்யாவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அம்பரீஷ் நடித்து உள்ள படம் என்பதால், ரம்யா தனது படத்தின் தலைப்பை மாற்றுவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story