பிரபல ரவுடியை கொல்ல முயற்சி
மந்திரி சசிகலா ஜோலே வீட்டு முன்பு, பிரபல ரவுடியை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு:-
பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் ககன் சர்மா. இவர், மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ககன் சர்மாவின் நண்பர்கள் சுனில்குமார், அருண், கிருஷ்ணா ஆவார்கள். இவர்களில் சுனில்குமார் மாநகராட்சி ஊழியர் ஆவார். இந்த நிலையில், ககன் சர்மா, சுனில்குமார் உள்பட 4 பேரும் காரில் வெளியே சென்று விட்டு ஜெயமஹால் பகுதிக்கு வந்தனர். அங்கு தான் மந்திரி சசிகலா ஜோலேவின் வீடு இருக்கிறது. இந்த நிலையில், மந்திரியின் வீட்டின் அருகே உள்ள சாலையில் வைத்து ரவுடி ககன் சர்மாவை, சுனில் குமார் உள்பட 3 பேர் காரை ஏற்றி கொல்ல முயன்றனர். 3 முறை அவர் மீது காரை ஏற்றியதாக தெரிகிறது. இதில், ககன் சர்மாவுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. உடனே 3 பேரும் காரில் தப்பி சென்று விட்டனர். படுகாயம் அடைந்த ககன் சர்மாவை மீட்டு விக்டோரியா ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ககன் சர்மாவுக்கும், சுனில்குமாருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வருவதாகவும், அந்த முன்விரோத்தில் அவரை கொல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜே.சி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில்குமாரை கைது செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட மற்ற 2 பேரையும் தேடிவருகிறார்கள்.