வேட்பாளர்கள் தேர்வில் எந்த குழப்பமும் இல்லை
ஜனதாதளம் (எஸ்) கட்சியில் வேட்பாளர்கள் தேர்வில் எந்த குழப்பமும் இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஜனதாதளம் (எஸ்) கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதிலும், ஹாசன் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் ஜனதாதளம் (எஸ்) கட்சி குழப்பம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று சிக்பள்ளாப்பூரில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
ஜனதாதளம் (எஸ்) கட்சி சட்டசபை தேர்தலுக்கு முழுமையாக தயாராகி வருகிறது. பஞ்சரத்னா யாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு, தேர்வு குறித்து பெங்களூருவில் ஆலோசனை நடைபெற உள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எங்கள் கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. அதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. எங்களது நோக்கம் 120 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது தான். ஜனதாதளம் (எஸ்) கட்சியை ஆதரிக்க மக்கள் தயாராகி விட்டனர். அதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆட்சி அமைப்பது உறுதி. இந்த முறை தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.