சொந்த செலவில் ஆன்மிக சுற்றுலா அனுப்பி வைக்கிறார்கள்


சொந்த செலவில் ஆன்மிக சுற்றுலா அனுப்பி வைக்கிறார்கள்
x

வாக்காளர்களை கவர புதிய யுக்தி அரசியல் பிரமுகர்கள் வினோத திட்டம்

கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலையொட்டி அனைத்து கட்சி பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் பம்பரம்போல் சுழன்று வாக்காளர்களை கவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் அந்தந்த தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளவர்கள், அத்தொகுதிகளில் டிக்கெட் கேட்டு போட்டியிட இருப்பவர்கள் என அனைவரும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை மறைமுகமாக கொடுத்து வருகிறார்கள்.

போலீசாரும், அரசு அதிகாரிகளும் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டாலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களின் வினியோகம் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள தொகுதிகளில் வாக்காளர்களை கவர புதுவித யுக்தி ஒன்றை கையில் எடுத்துள்ளனர். அது என்னவென்றால் ஆன்மிக சுற்றுலா என்ற பெயரில் வாக்காளர்களை கோவில்கள் உள்பட பல்வேறு ஆன்மிக தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று வருகிறார்கள். அந்த சுற்றுலாவுக்கான பஸ், தங்கும் இடம் உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசியல் பிரமுகர்கள், சுற்றுலா செல்வோரின் பயணச்செலவுக்கும் கையில் பணம் கொடுத்து அனுப்புவதாக சொல்லப்படுகிறது.

இதுபோல் பெங்களூரு எலகங்கா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வான எஸ்.ஆர்.விஸ்வநாத் தனது தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களை தினமும் 75 முதல் 100 பேர் என்ற அடிப்படையில் திருப்பதி கோவிலுக்கு தனது சொந்த செலவில் அனுப்பி வைத்து வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, 'நான் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து வருகிறேன். நான் தேர்தலின்போது எனது தொகுதிக்கு உட்பட்ட மக்களை திருப்பதி கோவிலுக்கு அனுப்பி வைப்பேன் என்று உறுதி அளித்திருந்தேன். அதன்படி அவர்களை தற்போது திருப்பதி கோவிலுக்கு அனுப்பி வைத்து வருகிறேன். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை' என்று கூறினார்.

இதுபோல பெங்களூரு ராஜாஜிநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டிக்கெட் கேட்டு வந்த ரகுவீர்கவுடா, அத்தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களை நிமிஷாம்பா கோவில், நஞ்சன்கூடு, சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில், ரங்கநாதசாமி கோவில், சிவனசமுத்திரா, தர்மஸ்தலா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஓம்சக்தி கோவில் ஆகிய ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி ராஜாஜிநகர் தொகுதியில் போட்டியிட புட்டண்ணா என்பவருக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் போல சாம்ராஜ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான ஜமீர் அகமது கான் தனது தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களை தனது சொந்த செலவில் சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவுக்கு அனுப்பி வைத்து வருகிறார். அவர் இதுவரை 17 பேரை மெக்காவுக்கு அனுப்பி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி அவர் கூறுகையில், 'கொரோனா காலத்தில் சிறப்பாக மக்கள் பணியாற்றியவர்களை தேர்வு செய்து நான் மெக்காவுக்கு அனுப்பி வைக்கிறேன். இது தேர்தலுக்காக இல்லை' என்றார்.

அரசியல் தலைவர்களின் இந்த புதுவிதமான யுக்தியை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும், அரசு அதிகாரிகளும் திணறி வருகிறார்கள்.


Next Story