ஆட்டோவுக்கு தீவைத்த கொள்ளையர்கள்; போலீஸ் விசாரணை
ஆட்டோவுக்கு தீவைத்த கொள்ளையர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மைசூரு: மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா சந்தேகெரேகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் நூர். இவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நூர் உன்சூர் நோக்கி சரக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் உன்சூர் அருகே சுன்னேகவுடர் காலனி பகுதியில் ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். பின்னர் மர்மநபர்கள், நூரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
ஆனால் அவர் பணம் கொடுக்காமல் ஆட்டோவை நிறுத்திவிட்டு இருளில் தப்பி ஓடிவிட்டார். இதனால் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்த மர்மநபர்கள் ஏமாற்றம் அடைந்ததுடன் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து பெட்ரோல் ஊற்றி ஆட்டோவுக்கு தீவைத்தனர். இதில் ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் உன்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.