சொகுசு காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது


சொகுசு காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
x

ஐதராபாத்தில் சொகுசு காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் கடந்த 28-ம் தேதி மாலை 4 மணி அளவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு 17 வயது சிறுமி விடு திரும்பியுள்ளார்.

விடுதியில் இருந்து வெளியே வந்த அந்த சிறுமியை வீட்டில் விட்டுவிடுவதாக கூறி சிறுவர்கள் உள்பட 5 பேர் சிவப்பு நிற 'பென்ஸ்' சொகுசு காரில் அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அந்த 5 பேரும் அந்த சிறுமியை பஞ்சாரா கில்ஸ் பகுதியில் உள்ள பேக்கரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கிருந்து அந்த 5 பேரும் சிறுமியை பென்ஸ் சொகுசு காரில் இருந்து மாற்றி இன்னோவா காரில் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த சிறுமியை அந்த 5 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேரில் 3 பேர் சிறுவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் மகன்களுக்கு தொடர்பு உள்ளதாக பாஜக குற்றச்சாட்டியுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சடுதுதீன் மாலிக், உமர் கான் மற்றும் 3 சிறுவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வழக்கில் சடுதுதீன் மாலிக் மற்றும் 2 சிறுவர்கள் என மொத்தம் 3 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவர்களின் பெயர்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், 5 பேரும் அரசியல் ரீதியில் பின்புலம் கொண்டவர்கள் என போலீசார் முன்னதாக தெரிவித்திருந்தனர். அதேவேளை, தற்போது கைது செய்யப்பட்ட சிறுவர்கள் உள்பட 3 பேரும் எந்த அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களின் மகன்கள் என்பது குறித்த தகவலை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

சிறுமி சொகுசு காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Next Story