கர்நாடகாவில் இந்த மாவட்டத்தின் பெயர் பெங்களூரு சவுத் என மாறுகிறது- மந்திரிசபை முடிவு
கர்நாடகாவின் ராமநகரா மாவட்டம் ஆகஸ்ட் 2007-ல் பிரிக்கப்பட்டபோது முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் இன்று மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ராமநகரா மாவட்டத்தின் பெயரை பெங்களூரு சவுத் என மாற்றம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ராமநகரா மாவட்டத்தில் ராமநகரா, மகடி, கனகபுரா, சன்னபட்னா மற்றும் ஹரோஹள்ளி ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரின் சொந்த மாவட்டம் ராமநகரா. இந்த மாவட்டத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையாவிடம் டி.கே.சிவக்குமார் கோரிக்கை மனு அளித்ததையடுத்து அதற்கான பணிகள் தீவிரமடைந்தன. சிவக்குமார், ராமநகராவின் பொறுப்பு மந்திரியாகவும், பெங்களூரு நகர மேம்பாட்டுத்துறை மந்திரியாகவும் உள்ளார்.
மாவட்ட பெயர் மாற்றம் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே அவர் கோரிக்கை வைத்து முன்மொழிந்தார். அப்போது ராமநகரா மாவட்டத்தில் உள்ள ரியல் எஸ்டேட் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் என, மதச்சார்பற்ற ஜனதா தளம் முன்னாள் தலைவர் எச்.டி.குமாரசாமி குற்றம் சாட்டினார். மீண்டும் முதல்-மந்திரியாக வரும்போது இந்த திட்டத்தை திரும்ப பெறுவேன் என்றும் கூறினார்.
ராமநகரா மாவட்டம் ஆகஸ்ட் 2007-ல் பிரிக்கப்பட்டபோது, மதச்சார்பற்ற ஜனதா தளம் -பா.ஜ.க. கூட்டணியின் முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்தார்.
மாவட்டத்தின் பெயரை மாற்றினால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என குமாரசாமி சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.
குமாரசாமியின் பிரதான அரசியல் களமாக ராமநகரா மாவட்டம் உள்ளது. ராமநகரா மற்றும் சன்னபட்னா சட்டமன்ற தொகுதிகளில் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். இந்த பகுதியில் இருந்து எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சன்னபட்னா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த குமாரசாமி, சமீபத்தில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால், சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது. சன்னபட்னா தொகுதியில் இடைத்தேர்தல் தேதி இன்னும் அறவிக்கப்படவில்லை. எனவே, தேர்தலுக்கு முன்னதாக மாவட்டத்தின் பெயரை மாற்றும் திட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.