சப்-இன்ஸ்கெ்டர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும்- குமாரசாமி வலியுறுத்தல்
போலீஸ் சப்-இன்ஸ்கெ்டர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக சட்டசபையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு குறித்த விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
கர்நாடகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் டி.ஜி.பி. கூட கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் நேர்மையான முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான், இனி நடைபெறும் பணி நியமனங்களில் தவறுகள் நடைபெறாது. அந்த தண்டனை ஒரு பாடமாக அமைய வேண்டும். அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் தவறுகளை சரிசெய்வதாக இந்த அரசு கூறியது. அது சரிசெய்யப்பட்டதா?. சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் நேர்மையான முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு அநீதி ஏற்படக்கூடாது. தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். அப்போது தான் மக்கள் அரசை நம்புவார்கள்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.