பெண்களை துன்புறுத்துபவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் - மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்த கெஜ்ரிவால் பேச்சு


பெண்களை துன்புறுத்துபவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் - மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்த கெஜ்ரிவால் பேச்சு
x

பெண்களை துன்புறுத்துபவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டிய இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர். பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர்.

3 நாள் நீடித்த போராட்டத்தை பேச்சுவார்த்தையில் முடிவுக்கு கொண்டு வந்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட மேற்பார்வை கமிட்டியை அமைத்தார். விசாரணை முடியும் வரை தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷனை ஒதுங்கி இருக்கவும் உத்தரவிட்டார்.

தனது மீதான புகார்களை திட்டவட்டமாக மறுத்த பிரிஜ் பூஷன் தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்று கூறினார். அதே சமயம் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடமாட்டேன் என்றும் அறிவித்தார்.

பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளிடம் விசாரணை நடத்திய 6 பேர் கமிட்டி விசாரணை அறிக்கையை சமீபத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கை விவரத்தை விளையாட்டு அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.

இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மலியுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் கடந்த 23-ம் தேதி முதல் போராட்டத்தில் குதித்தனர்.

இதனை தொடர்ந்து, இந்திய மல்யுத்த சம்மேள தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி கடந்த 24-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு மனு மீது நேற்று விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேள தலைவர் பிரிஜ் பூஷன் சரண் மீது இன்று (நேற்று) வழக்குப்பதிவு செய்யப்படும்' என்று உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக எம்.பி.யு.மான பிரிஜ் பூஷன் சரண் மீது டெல்லி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். போக்சோ வழக்கு உள்பட 2 வழக்குகள் பிரிஜ் பூஷன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரிஜ் பூஷனின் பதவி பறிக்கப்பட்டு அவர் கைது செய்யப்படும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தருக்கு நேரில் சென்று மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தருக்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீரர், வீராங்கனைகள் முன் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டிற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஒரு வாரமாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். பெண்களை துன்புறுத்துபவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.

வழக்குப்பதிவு செய்ய நாம் சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. அன்னா ஹசாரே இங்கு (ஜந்தர் மந்தர்) வந்தார் அரசியலை மாற்றினார். இந்த போராட்டம் விளையாட்டு துறையில் மாற்றத்தை கொண்டு வரும். இந்தியாவை நேசிப்பர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்' என்றார்.


Next Story