கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்; டி.கே.சிவக்குமார் பேட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கட்சி மேலிடம் முடிவு
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து கட்சியின் தேர்தல் குழு ஆலோசனை நடத்த இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியின் பிரமுகர்களுடன், அந்த குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின்பு ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோரின் பெயர்களை காங்கிரஸ் கட்சியின் மேலிட தேர்தல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
கர்நாடக தேர்தல் குழுவினர், கட்சியின் மேலிட குழுவுக்கு வேட்பாளர்களின் பெயர்களை சிபாரிசு மட்டுமே செய்வார்கள். ஏற்கனவே கர்நாடக காங்கிரஸ் சார்பிலும் ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் மேலிடமும் தனியாக ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்து ஆய்வு நடத்தி இருக்கிறது. எனவே யாருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்பது கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
தியாகம் செய்ய தயாராக...
தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி என்பது தெரியவந்திருப்பதால், தேர்தலில் போட்டியிட கட்சியின் பிரமுகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒவ்வொரு தொகுதிகளிலும் 15 முதல் 20 பேர் போட்டியிட தயாராக இருக்கின்றனர். தேர்தலில் போட்டியிட விரும்பவதில் எந்த தவறும் இல்லை. அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இதற்காக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், சீட் கிடைக்காவிட்டாலும், மற்றவர்கள் போட்டியிட வாய்ப்பளிப்பதுடன், கட்சிக்காக தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். காங்கிரஸ் எப்படியும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விடும் என்பதால், அரசு அமைந்ததும், தேர்தலில் போட்டியிடாமல் தியாகம் செய்தவர்களுக்கு மற்ற பதவிகள், அதிகாரம் வழங்கப்படும். தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் அனைவரும் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு முதலில் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.