'மேட்ரிமோனி' தளத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளை 'போஸ்' - பல மாநில பெண்களிடம் லட்ச கணக்கில் பணம் சுருட்டிய கும்பல்...!


மேட்ரிமோனி தளத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளை போஸ் - பல மாநில பெண்களிடம் லட்ச கணக்கில் பணம் சுருட்டிய கும்பல்...!
x

மேட்ரிமோனி தளத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளை போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியுள்ளனர்.

குருகிராம்,

மணமகன், மணமகள் தேடும் இணையதளமான 'மேட்ரிமோனி' இணையதளத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளை போல் போஸ் கொடுத்து பல மாநில பெண்களிடம் லட்ச கணக்கில் பணத்தை சுருட்டிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்த அமன் குமார் (வயது 26), ராகுல்சிங் (வயது 28), சந்தோஷ்குமார் (வயது 38) ஆகியோர் நைஜீரியாவை சேர்ந்த நபரின் தலைமையில் இத்தகைய ஏமாற்றுவேலையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் வசித்துவரும் மாப்பிள்ளைகள் போன்று மேட்ரிமோனி தளத்தில் தங்கள் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். வெளிநாட்டு மாப்பிள்ளைகள் போன்று பல்வேறு மாநில பெண்களுடன் பழகியுள்ளனர்.

பின்னர் அந்த பெண்களிடம் விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை அனுப்பும்படி கேட்டுள்ளனர். அவர்களின் பேச்சை கேட்டு பெண்கள் விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். அப்போது, அந்த கும்பலை சேர்ந்த சிலர் அந்த பெண்களிடம் வெளிநாட்டிற்கு பரிசுபொருட்களை அனுப்ப வருமானவரித்துறை, சுங்கத்துறையின் அனுமதியை பெறவேண்டும் என கூறி அதற்கான கட்டணமாக பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர்.

இந்த கும்பலின் வலையில் சிக்கிய கொல்கத்தாவை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அமன் குமார் (வயது 26), ராகுல்சிங் (வயது 28), சந்தோஷ்குமார் (வயது 38) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலை சேர்ந்த நைஜீரிய நபர் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் விவரம் பின்வருமாறு,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவின் சக்கர்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஷம்பா பால். இவருக்கு 'மேட்ரிமோனி' இணைதளம் மூலம் இந்த கும்பலை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் தான் இங்கிலாந்தில் டாக்டராக இருப்பதாக கூறி இன்ஸ்டாகிராம் மூலம் ஷம்பாவிடம் அறிமுகமாகியுள்ளார்.

இங்கிலாந்து டாக்டர் என நம்பிய ஷம்பா தனது வாட்ஸ்-அப் நம்பரை அவருக்கு கொடுத்துள்ளார். பின்னர், இருவரும் பழகிவந்துள்ளனர். அப்போது ஒரு கட்டத்தில் அவர் ஷம்பாவிடம் தங்கமும், 20 ஆயிரம் பவுண்ட் (இங்கிலாந்து பணம்) (இந்திய மதிப்பில் 20 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்) பணமும் அனுப்பி வைத்துள்ளதாகவும அதை பெற்றுக்கொள்ளும்படியும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஷம்பாவின் செல்போன் எண்ணுக்கு ஒரு பெண் தொடர்பு கொண்டு தன்னை கொரியர் சேவை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகமாகி உங்களுக்கு கொரியர் பார்சலில் தங்கம், இங்கிலாந்து பணம் 20 ஆயிரம் பவுண்ட் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பார்சலை பெற்றுக்கொள்ள வரி கட்ட வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு எண் ஒன்றையும் ஷம்பாவுக்கு அளித்துள்ளார். அந்த கொரியர் பெண்ணின் பேச்சை நம்பிய ஷம்பா அவர் கூறிய வங்கி கணக்கு எண்ணுக்கு முதலில் 55 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். பின்னர், 3 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய், 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய், 3 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய், 3 லட்ச ரூபாய் என அனுப்பியுள்ளார்.

ஆனால், இன்னும் வரி கட்ட வேண்டும் மேலும் 7 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கட்டினால் மட்டுமே தங்கமும் இங்கிலாந்து பவுண்ட் பணமும் கிடைக்கும் என கொரியர் பெண் ஷம்பாவிடம் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த ஷம்பா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெளிநாட்டு மாப்பிள்ளை போல் 'மேட்ரிமோனி' இணையதளத்தில் போஸ் கொடுத்து பெண்களை குறிவைத்து லட்சக்கணக்கில் பணமோசடி செய்த கும்பலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஷம்பாவை போன்று வெளிநாட்டு மாப்பிள்ளை என கூறி பல மாநிலங்களில் பல பெண்களிடம் இந்த கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த கும்பலின் முக்கிய குற்றவாளியான தலைமறைவான நைஜீரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story