'லிங்காயத் வேட்பாளர்களுக்கு டிக்கெட்'
- சமுதாய தலைவர் கோரிக்கை
கர்நாடக சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பெங்களூருவில் அகில பாரத வீரசைவ லிங்காயத் மகாசபை சார்பில் பெங்களூரு மாநகர பிரிவு பொது செயலாளர் வினய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'கர்நாடகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் லிங்காயத் சமூக மக்களை புறக்கணிக்கிறது. அவ்வாறு இல்லை என்றால் அவர்கள் பெங்களூரு தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் லிங்காயத் சமூக வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். பெங்களூருவில் மட்டும் 30 லட்சம் லிங்காயத் மக்கள் வசிக்கிறார்கள். 17 தொகுதிகளில் வெற்றியை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். ஆனால் லிங்காயத் சமூக மக்களுக்கு எந்த கட்சியும் டிக்கெட் கொடுக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. ஆனால் அதில் பெங்களூரு தொகுதியில் ஒருவர் கூட லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அதனால் பெங்களூருவில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த குறைந்தது தலா 4 பேருக்காவது தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்க வேண்டும்' என்று கூறினார்.