திருப்பதி: ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் - 13 பேர் கைது
திருப்பதி அருகே வெவ்வேறு இடங்களில் மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருமலை:
செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார் உத்தரவின்படி, திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு மேதாசுந்தரராவ் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார்ரெட்டி மற்றும் போலீசார் தனித்தனி குழுவாகப் பிரிந்து நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று அதிகாலை வரை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பதியை அடுத்த பாக்ராப்பேட்டை மலைப்பாதையில் பீமாவரம் வனப்பகுதியில் ஒரு கும்பல் நேற்று அதிகாலை சாமலா கிழக்கு பீட் பகுதியில் உள்ள நஞ்சாரம்மாகுளம் அருகில் செம்மரக்கட்டைகளை கடத்தி சென்றது தெரிய வந்தது.
அந்தக் கும்பலை போலீசார் சுற்றி வளைத்தபோது, செம்மரக்கட்டைகளை கீழே போட்டுவிட்டு அவர்கள் தப்பியோடினர். போலீசார் விரட்டிச் சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். பிடிபட்டவர், தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குமார் (வயது 38) எனத் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 9 செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல் பாலப்பள்ளி வனச்சரகத்தில் கங்கிமடுகு வனப்பகுதியில் மற்றொரு கும்பலை பிடிக்க முயன்றபோது, அந்தக் கும்பல் செம்மரக்கட்டைகளை கீழே போட்டு விட்டு தப்பியோடி விட்டனர். கும்பல் விட்டுச் சென்ற 14 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் மேல்சூரு வனப்பகுதியில் உள்ள வல்லம் பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
அவர்கள் தொல்லெட்டி சுதர்சன், யாககிறி பிரசாத், எல்லஞ்செட்டி செஞ்சய்யா, குவ்வகுல மாரய்யா, துபாகுல ஹரிகிருஷ்ணா, பத்ரா நாகராஜு, டொப்பரம் கோபி, துபாகுல சீனு, மல்லேம்பள்ளி சிவா, ஏகல வெங்கடேஷ், குவ்வுகுல முருகய்யா, பாண்டி சீனிவாஸ் எனத் தெரிய வந்தது. அவர்கள் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து மேற்கண்ட 13 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 23 செம்மரக்கட்டைகள், கோடரிகள், தோள்பைகள், ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.