நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு டி.கே.சிவக்குமார் உத்தரவு
மேகதாது திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:-
நீர்ப்பாசன திட்டங்கள்
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
கர்நாடக அரசின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை பெற நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இது தான் நான் உங்களுக்கு விதிக்கப்படும் இலக்கு. மேகதாது, மகதாயி திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நீர் பங்கீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவாக அமல்படுத்துவது, நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதி ஆதாரங்களை திரட்டுவது, மத்திய அரசின் நிதி உதவியை பெறுவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது போன்ற விஷயங்களில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
ஆக்கப்பூர்வமான பணிகள்
நீர்ப்பாசன திட்டங்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி செலவு செய்வதாக உறுதியளித்துள்ளோம். மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் நல்ல நபர். அவரின் ஒத்துழைப்பை நாம் பெற வேண்டும். திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த வேண்டும். பணிகளின் தரத்தில் சமரசம் கூடாது. மேகதாது திட்டத்திற்கு அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியது. அதை நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தாதது ஏன்?.
டெண்டர் விடுவது, அனுமதி வழங்குவது, பணம் பட்டுவாடா செய்வது போன்றவற்றுக்கு மட்டுமே உங்களின் உழைப்பை கொடுக்க வேண்டாம். அதை தாண்டி ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள தீவிரமாக உழைக்க வேண்டும். எனக்கு எந்த விரோதமும் இல்லை. ஆனால் பணிகள் முறையாக நடைபெற வேண்டும். உங்களுக்கு பதவி வழங்கியவர் களுக்கு விசுவாசமாக இருந்தால் அதை சகித்துக்கொள்ள மாட்டேன்.
நம்பிக்கை பெறுவோம்
நமது அண்டை மாநிலங்களுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளது. கர்நாடகத்திற்கு அநீதி ஏற்பட்டுள்ளது. கர்நாடக எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் நம்பிக்கையையும் பெறுவோம். பிரதமர் உள்பட சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து பேசுவோம். திட்ட பணிகளின் நிலை குறித்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தாக்கல் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு சொட்டு நீரையும் விவசாயிகளின் நலனுக்கு பயன்படுத்த வேண்டும். எங்கெங்கு சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து ஒரு வரைபடத்தை தயாரிக்க வேண்டும். கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்), மஞ்சனபெலே, திப்பகொண்டனஹள்ளி, ஹேமாவதி அணைகளில் பூங்காக்கள் அமைத்து சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும். இந்த பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.