சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் கால்நடைகளுடன் சாலை மறியல்


சாலை அமைக்கக்கோரி  கிராம மக்கள் கால்நடைகளுடன் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

முல்பாகலில் சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் கால்நடைகளுடன் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகாவில் தொம்மச்சந்திரா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சாலை அமைக்க பொதுப்பணித்துறையினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லி கற்களை கொட்டினர். ஆனாலும் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து வேண்டுகோள் விடுத்து இருந்தனர். ஆனாலும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுடன் முல்பாகல் தேசிய நெடுஞ்சாலை 75-ல் சாலைக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து முல்பாகல் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை துணை இயக்குனர் சேஷாத்ரி ஆகியோர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற அதிகாரிகள் கிராம மக்களை சமாதானம் செய்தனர். மேலும் 15 நாட்களுக்குள் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story