சிறையில் கைதிக்கு கொடுக்க கஞ்சாவை சட்டையில்மறைத்து கடத்திய 3 பேர் கைது
சிறையில் உள்ள கைதிக்கு கொடுப்பதற்காக கஞ்சாவை சட்டையில் மறைத்து வைத்து கொண்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவமொக்கா;
கைதியை பார்க்க...
சிவமொக்கா மாவட்டம் சோகானே மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருப்பவர் நவாப். இவர் பல வழக்குகளின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் அவரை பார்ப்பதற்கு நேதாஜி சதுக்கத்தில் உள்ள ஜே.பி.நகர் பகுதியை சேர்ந்த முஜாமீன் மற்றும் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்த அப்துல் ஆபீஸ்(வயது 24), முகமது உசேன்(21) ஆகியோர் உறவினர்கள் என கூறி சிறைக்கு வந்தனர்.
இதையடுத்து அவர்களை சிறை அதிகாரிகள் முக்கிய நுழைவுவாயில் வழியாக உள்ளே செல்ல அனுமதித்தனர். அங்கு அவர்களை சிறை போலீசார் சோதனை செய்தனர்.
கஞ்சா பொட்டலங்கள்
அப்போது அவர்கள் தங்களது சட்டையின் காலர் பகுதியில் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் சிறை போலீசாா் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிறையில் உள்ள நவாப்பிற்கு கஞ்சாவை கொடுக்க வந்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை சிறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து துங்கா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த துங்கா போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.