சாலையில் தவறான வழியில் சென்றதை தட்டிக்கேட்ட டாக்டர் மீது சரமாரி தாக்குதல்
சாலையில் தவறான வழியில் சென்றதை தட்டிக்கேட்ட டாக்டர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மைசூரு:
மைசூரு டவுனில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் 4-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று போகாதி ஜங்ஷன் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அவர்கள் போகாதி ஜங்ஷன் சாலையில் (ராங் ரூட்) தவறான வழியில் சென்றுள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிளை வளைத்து குறுக்கு மறுக்காக ஓட்டினர்.
இந்த சந்தர்ப்பத்தில் சாலையில் காரில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டரான குரு பிரசாத் என்பவர் வந்துள்ளார். அப்போது அவர், காரை நிறுத்தி தவறான வழியில் சென்ற கல்லூரி மாணவர்களை கண்டித்துள்ளார். பின்னர் காரில் புறப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள், காரை மோட்டார் சைக்கிளில் சிறிதுதூரம் விரட்டி சென்று மறித்தனர். பின்னர் கிழே இறங்கிய மாணவர்கள், காருக்குள் இருந்த டாக்டர் குருபிரசாத்தை வெளியே இழுத்து சரமாரியாக அடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர்.
இதனால் டாக்டர் குருபிரசாத் காயம் அடைந்தார். அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு சரஸ்வதிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் டாக்டர் குருபிரசாத்தை தாக்கிய கல்லூரி மாணவர்களில் ஒருவர் மைசூரு மாநகராட்சி கவுன்சிலரின் மகன் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கல்லூரி மாணவர்களை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.