நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க பசவராஜ் பொம்மை நாளை டெல்லி பயணம்
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நாளை(சனிக்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசவும் அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நாளை(சனிக்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசவும் அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாளை டெல்லி பயணம்
டெல்லியில் வருகிற 7-ந் தேதி (அதாவது நாளை மறுநாள்) நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்திருக்கிறார். இதையடுத்து, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நாளை (சனிக்கிழமை) காலை 11.30 மணியளவில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார்.
இன்று மாலையில் டெல்லியில் நடைபெறும் 75-வது பவள சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருக்கிறார். நாளை, டெல்லியில் தங்கும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு பெங்களூருவுக்கு திரும்பி வர உள்ளார்.
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து...
இதற்கிடையில், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்லும் முதல்-மந்திரிபசவராஜ் பொம்மை மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும் பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்துள்ளார். ஏற்கனவே அவர், மேலிட தலைவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பும், நேரமும் கிடைத்தால் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவேன் என்று கூறி இருந்தார். இதன் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருப்பதால், மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். ஆனால் மந்திரிசபை விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இந்த முறை டெல்லி பயணத்தின்போது மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு பா.ஜனதா மேலிடம் அனுமதி அளிக்குமா? என எம்.எல்.ஏ.க்கள் காத்திருக்கிறார்கள்.