பெண் காபித்தோட்ட உரிமையாளரிடம் ரூ.30 லட்சம் நூதன மோசடி; அண்ணன் மகன் கைது


பெண் காபித்தோட்ட உரிமையாளரிடம் ரூ.30 லட்சம் நூதன மோசடி; அண்ணன் மகன் கைது
x

பாலேஹொன்னூரில் பெண் காபித்தோட்ட உரிமையாளரிடம் ரூ.30 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு;

காபித்தோட்ட உரிமையாளர்

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா சிகபானா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலியானா. காபித்தோட்ட உரிமையாளரான இவர் தனக்கு சொந்தமான ரூ.27 லட்சம் மதிப்பிலான நகைகளை பாலேஹொன்னூரில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் வைத்திருந்தார்.

இவரது அண்ணன் மகன் ஜீவன். இவர் கப்பகத்தே கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் ஜூலியானாவிற்கு கார் டிரைவராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் வங்கி லாக்கரில் உள்ள நகைகளை எடுத்து வேறொரு வங்கி லாக்கரில் வைக்கலாம் என்று அறிவுறுத்தினார்.

அதன்பேரில் ஜூலியானா, ஜீவனுடன் சேர்ந்து வங்கியில் இருந்து நகைகளை எடுத்தார். பின்னர் அந்த நகைகளை வேறொரு வங்கியில் உள்ள லாக்கரில் வைப்பதாக கூறி ஒரு ஆவணத்தில் ஜூலியானாவிடம், ஜீவன் கையெழுத்து வாங்கினார்.

கைது

ஆனால் அந்த நகைகளை ஜீவன் வங்கி லாக்கரில் வைக்காமல் அடகு வைத்து மோசடி செய்தார். மேலும் அந்த பணத்தை வைத்து அவர் உல்லாசமாக செலவு செய்து வந்தார்.

இதேபோல் ஜீவன், ஜூலியானாவிடம் இருந்து கையெழுத்து வாங்கி அவரது பெயரில் தபால் நிலையத்திலும், வேறு சில வங்கிகளிலும் இருந்த ரூ.3 லட்சத்தை எடுத்து மோசடி செய்து விட்டார். இதுபற்றி அறிந்த ஜூலியானா அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் இதுகுறித்து பாலேஹொன்னூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சொந்த அத்தையிடமே வாலிபர் நூதன முறையில் ரூ.30 லட்சத்தை மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story