இந்தியாவின் செயல்திறனை உலகமே பாராட்டுகிறது - பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவின் வளர்ச்சிக்கு உத்தரப் பிரதேசம் உத்வேகத்தைக் அளிக்கும் என பிரதமர் பேசினார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் செய்துள்ளார். அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் போது, சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
வேளாண் மற்றும் அதனை சார்ந்த இதர துறைகள், தகவல் மற்றும் மின்னணு தொழில்நுட்பம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்து உற்பத்தி, சுற்றுலா, பாதுகாப்பு, கைத்தறி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த 1,406 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், " மத்திய அரசின் 8 ஆண்டுகளை நாங்கள் சமீபத்தில் நிறைவு செய்துள்ளோம். கடந்து வந்த இந்த ஆண்டுகளில், சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற மந்திரத்தில் நாங்கள் முன்னேறி உள்ளோம். கொள்கை ஸ்திரத்தன்மை, ஒருங்கிணைப்பு மற்றும் வணிகம் செய்வதில் கவனம் செலுத்தி உள்ளோம்.
80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் இங்கு செய்யப்பட்டுள்ளன. இந்த சாதனை முதலீடு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு உத்தரப் பிரதேசம் தான் உத்வேகத்தைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். அடுத்த 10 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் இந்தியாவுக்கு ஒரு பெரிய உந்து சக்தியாக இருக்கும்.
இன்று உலகம் இந்தியாவின் திறனைப் பார்த்து, இந்தியாவின் செயல்திறனைப் பாராட்டுகிறது. ஜி20 நாடுகளின் பொருளாதாரத்தில் நாம் வேகமாக வளர்ந்து வருகிறோம். எங்கள் சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை ஒரு தேசமாக வலுப்படுத்த நாங்கள் உழைத்துள்ளோம். " என மோடி பேசினார்.