தொழில் அதிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தொழில் அதிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை உப்பள்ளி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பகுதியை சேர்ந்தவர்கள் அபுஜர் நாலபந்த் (வயது32), ஆரிப்கான் மத்தோடி (28). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் அந்தப்பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அபுஜர், ஆரிப்கான் ஆகியோர் அந்தவழியாக வந்த காரை நிறுத்தி அதில் இருந்தவரை கொலை செய்து விட்டு, அவரிடம் இருந்த ரூ.5½ லட்சத்தை கொள்ளையடித்து விட்டு, காரை கப்பூர் அருகே நிறுத்தி விட்டு அவர்கள் 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து கசபாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் கொலை செய்யப்பட்ட நபர் உப்பள்ளியை சேர்ந்த தொழில் அதிபர் பண்டுரங்க சித்தண்ணா பவார் என்பதும் தொியவந்தது. இதுதொடர்பாக அபுஜர், ஆரிப்கான் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை உப்பள்ளி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் விசாரணை முடிந்து நீதிபதி இறுதி தீர்ப்பு வழங்கினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட அபுஜர், ஆரிப்கான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.