பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் சுங்க கட்டணம் திடீர் உயர்வு


பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் சுங்க கட்டணம் திடீர் உயர்வு
x

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் சுங்க கட்டணம் 22 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பெங்களூரு:

சுங்க கட்டணம் உயர்வு

பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையை பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம் திறந்து வைத்தார். இந்த 10 வழிச்சாலையில் 6 வழிச்சாலை பிரதான சாலை ஆகும். அதன் இருபுறமும் தலா 2 வழிச்சாலை சா்வீஸ் சாலைகளாக விடப்பட்டுள்ளன. வாகனங்கள் 6 வழிச்சாலையில் பயணித்தால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். சர்வீஸ் சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் கிடையாது. இந்த பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் 2 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த சாலையில் சுங்க கட்டணம் 22 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது கார், வேன், ஜீப்புகளுக்கு ஒரு சுங்கச்சாவடியில் ஒரு வழி கட்டணமாக ரூ.135 வசூலிக்கப்படுகிறது. அது தற்போது ரூ.165 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய வாகனங்கள், மினி பஸ்களின் கட்டணம் ரூ.220-ல் இருந்து ரூ.270 ஆகவும், லாரி, பஸ், 2 ஆக்சில் பஸ்களுக்கு கட்டணம் ரூ.460-ல் இருந்து ரூ.565 ஆகவும், மூன்று ஆக்சில் கொண்ட வணிக வாகனங்களுக்கு கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.615 ஆகவும், அதை விட கனரக வாகனங்களுக்கு ரூ.720-ல் இருந்து ரூ.885 ஆகவும், 7 மற்றும் அதைவிட அதிகமான ஆக்சில் திறன் கொண்ட வாகனங்களுக்கு ரூ.880-ல் இருந்து ரூ.1,080 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பா.ஜனதா ஆதங்கம்

இந்த சாலை மார்ச் மாதம் திறக்கப்பட்ட பிறகு ஏப்ரல் 1-ந் தேதியே சுங்க கட்டணம் 22 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் கடும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற இருந்ததால் ஆளும் பா.ஜனதா சற்று ஆதங்கம் அடைந்தது. இதையடுத்து இந்த சுங்க கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து தற்போது அதே அளவு சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சாலை திறக்கப்பட்டு மூன்றே மாதங்களில் சுங்க கட்டணத்தை உயர்த்துவதா? என்று வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Next Story