தொழிலாளிகளை குடோனில் சிறை வைத்து சித்ரவதை; பெண் கருச்சிதைவுக்கு காரணமான பா.ஜனதா பிரமுகர்-மகன் மீது வழக்கு
சிக்கமகளூரு அருகே வேலையை விட்டு செல்வதாக கூறியதால் தோட்டத்தில் வேலைபார்க்கும் தொழிலாளிகளை குடோனில் சிறை வைத்து சித்ரவதை செய்ததும், பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இதுதொடர்பாக பா.ஜனதா பிரமுகர்-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு: சிக்கமகளூரு அருகே வேலையை விட்டு செல்வதாக கூறியதால் தோட்டத்தில் வேலைபார்க்கும் தொழிலாளிகளை குடோனில் சிறை வைத்து சித்ரவதை செய்ததும், பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இதுதொடர்பாக பா.ஜனதா பிரமுகர்-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.9 லட்சம் முன்பணம்
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா ஜேனுகத்தே கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். பா.ஜனதா பிரமுகரான இவருக்கு சொந்தமாக காபி தோட்டம் உள்ளது. இந்த காபி தோட்டத்தில் வட மாநிலத்தை சேர்ந்த 6 குடும்பத்தினர் என பெண்கள் உள்பட 14 பேர் வேலை பார்த்து வந்தனர். இங்கு வேலை செய்வதாக ஒப்பந்த அடிப்படையில் ரூ.9 லட்சம் முன்பணமாக வாங்கியிருந்தனர். ஆனால் நாளடைவில் அங்கு வேலை சிரமமாக இருந்ததால் மற்றொரு தோட்டத்திற்கு வேலைக்கு செல்லலாம் என்று முடிவு செய்து அவர்கள் உரிமையாளர் ஜெகதீசிடம் கூறியுள்ளனர். அதற்கு ஜெகதீஷ் வேலை போக மீதி பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு செல்லும்படி கூறியுள்ளார்.
ஆனால் அவர்களிடம் போதிய பணம் இல்லை. இதனால் அவர்கள், உரிமையாளர் ஜெகதீசிடம் வேறு ேதாட்டத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டு பணத்தை பெற்று தந்துவிடுவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு ஜெகதீஷ் சம்மதிக்கவில்லை. இதனால் தொழிலாளிகள், ஜெகதீசிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
குடோனில் சிறை வைத்து சித்ரவதை
இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ், அவரது மகன் திலக் ஆகியோர் தொழிலாளிகள் 14 பேரையும் காபி தோட்ட குடோனில் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து செல்போன்களை பிடுங்கி உள்ளனர்.
இதில் வடமாநிலத்தை சேர்ந்த அர்பிதா என்ற பெண் திருமணமாகி
2 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். அர்பிதா செல்போனை தர மறுத்ததால் தாக்கியதில் அவருக்கு கரு சிதைந்துள்ளது. தற்போது அந்த பெண், சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் வழக்குப்பதிவு
இந்த சம்பவம் குறித்து பாலேஒன்னூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளிகளை மீட்டனர். மேலும் தொழிலாளிகளை குடோனில் அடைத்து அடித்து சித்ரவதை செய்த பா.ஜனதா பிரமுகர் ஜெகதீஷ், அவரது மகன் திலக் ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மீதான வன்கொடுமை சட்டம் உள்பட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.