போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்
மங்களூரு அருகே, நடைபாதை வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
மங்களூரு:-
வியாபாரிகள்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த பந்தர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட நேரு மைதானம் அருகே வியாபாரிகள் சிலர் தள்ளுவண்டிகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதை அறிந்த பந்தர் போலீசார் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு வந்து, வியாபாரிகளை அப்புறப்படுத்தினர். அப்போது அப்துல் காலித், முகமது ரியாஸ் என்ற 2 வியாபாரிகள் மட்டும் அங்கிருந்து செல்லவில்லை. இதைப்பார்த்து கோபமடைந்த பந்தர் போலீசார் 2 பேரையும், அதே இடத்தில் வைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியுள்ளனர்.
வழக்கு எதுவும் பதியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை 2 பேரையும் போலீசார் விடுவித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவர் இம்தியாசிடம் தெரிவித்தனர்.
பரபரப்பு
இதையடுத்து நேற்று இம்தியாஸ் தலைமையில் வியாபாரிகள் ஊர்வலமாக சென்று, பந்தர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வியாபாரிகளுக்கு இனி எந்த தொந்தரவும் அளிக்கப்படாது என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.