ஆகஸ்டு 12-ந் தேதி வரை அத்திகுந்தி-கொலகாமே சாலையில் போக்குவரத்துக்கு தடை; கலெக்டர் ரமேஷ் உத்தரவு


ஆகஸ்டு 12-ந் தேதி வரை அத்திகுந்தி-கொலகாமே  சாலையில் போக்குவரத்துக்கு தடை; கலெக்டர் ரமேஷ் உத்தரவு
x

மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், ஆகஸ்டு 12-ந் தேதி வரை அத்திகுந்தி-கொலகாமே சாலையில் போக்குவரத்துக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

சிக்கமகளூரு;

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கர்நாடகத்தில் உடுப்பி, தட்சிண கன்னடா போன்ற கடலோர மாவட்டங்களிலும், குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா போன்ற மலைநாடு மாவட்டங்களிலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊருக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து உள்ளது.

மேலும், ஆகும்பே உள்பட பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் அவற்றை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் சிக்கமகளூரு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கலெக்டர் ரமேஷ் கூறியதாவது:-

நிலச்சரிவு

சிக்கமகளூருவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், மலைப்பாதைகளில் அதிலும் குறிப்பாக கொலகாமே அருகே 2 நாட்களுக்கு முன்பு மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பின்னர், சாலையில் கிடந்த மணல், பாறைகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்து வழிவகை செய்யப்பட்டது. எனினும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த பகுதிகளில் மீண்டும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், அத்திகுந்தி முதல் கொலகாமே வரையிலான சாலையில் வாகன போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி வரை முதற்கட்டமாக அமலில் இருக்கும். வாகன ஓட்டிகளுக்கு மாற்றுப்பாதைக்கு வழி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


கோரிக்கை

போக்குவரத்து தடை செய்யப்பட்ட சாலை பகுதிகளில் ஏராளமான காபி தோட்டங்கள் உள்ளன. அந்த தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளிகள் மற்றும் தோட்ட உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

எனவே மாற்று வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என காபி தோட்ட தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story