ராஜஸ்தானில் முதல் முறை பாம்பு கடியில் தப்பிய நபர் 2-வது முறை பலியான சோகம்
ராஜஸ்தானில் முதல் முறை பாம்பு கடியில் உயிர் தப்பிய நபர் 2-வது முறையாக பாம்பு கடித்து மரணம் அடைந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
ஜோத்பூர்,
ராஜஸ்தானில் ஜோத்பூர் நகரில் மெஹ்ரான்கார் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜசாப் கான் (வயது 44). கடந்த சில நாட்களுக்கு முன் அவரை பண்டி என்ற விரியன் வகை நச்சு பாம்பு ஒன்று காலில் கடித்து உள்ளது. இந்த சம்பவத்தில் உடனடியாக அவர் பொக்ரான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
4 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இதன்பின்னர், கடந்த ஜூன் 26-ந்தேதி மீண்டும் அதே வகை பாம்பு அவருடைய மற்றொரு காலில் கடித்து உள்ளது. இந்த முறை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
முதல் பாம்பு கடித்ததில் இருந்து அவர் மீண்டு வருவதற்குள் மற்றொரு பாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்து உள்ளார். அவருக்கு தாய், மனைவி, 4 மகள்கள் மற்றும் 5 வயது மகன் உள்ளனர். ஜசாப் மரணம் அடைந்ததும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அடித்ததில், அந்த பாம்பு உயிரிழந்து விட்டது.
பாம்பு கடியில் இருந்து சிகிச்சை பெற்று, தப்பிய 4 நாட்களில் மீண்டும் அதே வகை மற்றொரு பாம்பு கடித்து நபர் உயிரிழந்தது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மத்தியில் சோகம் ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி பனியானா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.