உ.பி.யில் அவலம்: பலாத்காரம், கட்டாய கருக்கலைப்பில் இளம்பெண் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததில் உயிரிழந்த அவலம் ஏற்பட்டு உள்ளது.
வாரணாசி,
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் 22 வயது இளம்பெண் தனது உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 12-ந்தேதி அருகேயுள்ள கிராமத்திற்கு உறவினரை பார்த்து விட்டு வருகிறேன் என கூறி சென்றவர் பின்னர் உயிரிழந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டு உள்ளார்.
இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு சூரியகாந்த் திரிபாதி கூறும்போது, இளம்பெண் அவரது மாமாவின் வீட்டில் தங்கி படித்து வந்தபோது, 28 வயது டிரைவர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இளம்பெண் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். இதில், அவர் 5 மாத கர்ப்பிணியாகி உள்ளார்.
இதனால், கருவை கலைக்க வற்புறுத்தி, அவரை வாரணாசியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு டிரைவர் அழைத்து சென்றுள்ளார். சில மருந்துகளை கொடுக்க முயற்சித்ததில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, உடனடியாக இளம்பெண்ணை அழைத்து கொண்டு வாரணாசியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு டிரைவர் சென்றுள்ளார். இதில், 2-வது மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்வதற்கான சிகிச்சையில் அந்த இளம்பெண் உயிரிழந்து விட்டார் என எஸ்.பி. திரிபாதி தெரிவித்து உள்ளார்.
இதன்பின், தனது நண்பர் உதவியுடன் இளம்பெண்ணின் உடலை மறைக்க டிரைவர் முயன்றுள்ளார். இதில், பிடிபட்ட அவர்கள் பின்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி மற்றும் அதிக அளவில் ரத்த இழப்பு ஆகியவற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில், டிரைவர், அவரது நண்பர், தனியார் மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் மற்றும் டாக்டர் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர, தப்பிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய அழைத்து சென்றதில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.