ஒடிசா ரெயில் விபத்து வேதனை அளிக்கிறது - அமித்ஷா
ஒடிசாவில் உள்ள பாலசோரில் நடந்த ரெயில் விபத்து வேதனை அளிக்கிறது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்,
புவனேஷ்வர்,
கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பலாஷோர் அருகே சரக்கு ரயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் ரயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ரயிலின் 8 பெட்டிகள் வரை தடம் புரண்டதாகவும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வரை இயக்கப்படுகிறது. வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாகவும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடப்பதாகவும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.கவிழ்ந்து கிடக்கும் ரயிலுக்குள் இருந்து காயம் அடைந்த பயணிகள் மீட்கப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரயில் மீது தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. ரெயில் விபத்தால் இதுவரை 179 பேர் காயமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுமார் 50 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஒடிசாவில் உள்ள பாலசோரில் நடந்த ரயில் விபத்து வேதனை அளிக்கிறது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
"ஒடிசாவில் உள்ள பாலசோரில் நடந்த ரயில் விபத்து ஆழ்ந்த வேதனை அளிக்கிறது.தேசிய பேரிடர் மீட்புப் குழு ஏற்கனவே விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளது, மற்ற குழுக்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட விரைந்துள்ளன.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன், என பதிவிட்டுள்ளார்.