கலபுரகி மத்திய சிறையில் கைதிகளுக்கு ஆடுகள் வளர்ப்பு குறித்து பயிற்சி


கலபுரகி மத்திய சிறையில்  கைதிகளுக்கு ஆடுகள் வளர்ப்பு குறித்து பயிற்சி
x
தினத்தந்தி 23 May 2022 8:36 PM IST (Updated: 23 May 2022 8:37 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் முதல் முறையாக கலபுரகி மத்திய சிறையில் கைதிகளுக்கு ஆடுகள் வளர்ப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுவது தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

பெங்களூரு:

கர்நாடகத்தில் முதல் முறையாக...

பொதுவாக குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்படும் கைதிகள், சிறைவாசம் அனுபவிக்கும் போது, அவர்களுக்கு தொழில் பயிற்சி, கல்வி கற்க தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. சில சிறைகளில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள், கைதிகள் விளைவிக்கும் காய்கறி உள்ளிட்டவை வெளியில் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது.

சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகள் திருந்தி வாழ்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடகத்தில் முதல் முறையாக கலபுரகி மத்திய சிறையில் கைதிகளுக்கு ஆடுகள் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கும் திட்டம் தொடஙகப்பட்டுள்ளது.

ஆடுகள் வளர்க்க பயிற்சி

கலபுரகி மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகள் தங்களது தண்டனை காலம் முடிந்து வெளியே செல்லும்போது சொந்தமாக தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கைதிகளுக்கு ஆடுகள் வளர்ப்பு குறித்து தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 26 ஆடுகள் வாங்கப்பட்டுள்ளது. இந்த ஆடுகளை சிறை அதிகாரிகள், பிற ஊழியா்கள் தங்களது சொந்த பணத்தில் வாங்கி உள்ளனர்.

அவற்றில் 5 ஆண் ஆடுகளும், 21 பெண் ஆடுகளும் அடங்கும். சிறையில் ஆடுகளை கட்டிப்போட்டு வளர்ப்பதற்காக ரூ.10 லட்சத்தில் 2 ஷெட்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதியை அரசு வழங்கி இருக்கிறது. தினமும் சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளுக்கு ஆடுகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்போது விற்பனை செய்தால் லாபம் கிடைக்கும் உள்ளிட்டவை குறித்து கைதிகளுக்கு தினமும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கைதிகள் சொந்த தொழில்

இதுகுறித்து கலபுரகி மத்திய சிறை அதிகாரியான ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், 'சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஆடுகள் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கமே, சிறைவாசம் முடிந்து வெளியே செல்லும் போது, அந்த கைதிகள் திருந்தி வாழ்வதுடன் சொந்தமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது தான். இதற்காக தினமும் 2 கைதிகளுக்கு ஆடுகள் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஆடுகள் வளர்ப்பு தொழில் தற்போது அதிக லாபம் கிடைக்க கூடியதாக உள்ளது. அதனால் தான் கைதிகளுக்கு ஆடுகள் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆடுகள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை அரசின் வங்கி கண்க்குக்கு நேரடியாக செலுத்தப்படும்' என்றார்.


Next Story