சிவமொக்காவில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல்


சிவமொக்காவில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா மாவட்டத்தில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டத்தில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.64½ லட்சம் மதிப்பிலான சேலைகளும் சிக்கி உள்ளது.

தேர்தல் கண்காணிப்பு

கர்நாடகவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளன. இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள், போலீசார் மாநிலம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் சிவமொக்கா மாவட்டத்திலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் சிவமொக்கா மாவட்டம் தொட்டபேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சேலைகள் இருந்தன. ஆனால் அதற்கான ஆவணங்கள் லாரியில் வந்தவரிடம் இல்லை. இதையடுத்து ரூ.5½ லட்சம் மதிப்பிலான சேலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் சோதனை

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சேலைகள் கொண்டு செல்லப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிகாரிப்புரா சோதனை சாவடி வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அதில் ரூ.98 லட்சம் இருந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் ரூ. 98 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தீர்த்தஹள்ளி தாலுகா மாவட்ட எல்லையான ஆகும்பே சோதனைச் சாவடியில் லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.59 லட்சம் சேலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சொரப் தாலுகா சோதனைச் சாவடியில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.12 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரூ.1 கோடி பறிமுதல்

சிவமொக்கா மாவட்டத்தில் ஒரே நாளில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 கோடியே 10 லட்சம் ரொக்கம், ரூ.64½ லட்சம் மதிப்பிலான புடவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் விதிமீறல் அமலில் உள்ளதால் பொதுமக்கள் வெளியே செல்லும்போது ரொக்கத்திற்கான ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story