விவசாய நிலத்தில் இஞ்சி திருட முயற்சி; 3 பேர் சிக்கினர்
உன்சூர் அருகே விவசாய நிலத்தில் இஞ்சி திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உன்சூர்:
உன்சூர் அருகே விவசாய நிலத்தில் இஞ்சி திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விலை உயர்வு
நாட்டில் தக்காளி விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாகியும் தக்காளி விலை குறையாமல் இருந்து வருகிறது. தக்காளியை போல, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் ஒரு கிேலா ரூ.150 முதல் ரூ.200 வரையும், பூண்டு கிலோ ரூ.200-ம், இஞ்சி கிலோ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், தக்காளியை போல சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி திருட்டும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க விவசாயிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் அரை ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து 2 மூட்டைகளில் வைத்திருந்த இஞ்சியை மர்மநபர்கள் திருட முயன்ற சம்பவம் மைசூருவில் நடந்துள்ளது. அதுபற்றிய தகவல் பின்வருமாறு:-
இஞ்சியை திருட முயற்சி
மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா ஒசகோட்டே பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரா. இவரது நண்பர்கள் நிவாஸ் மற்றும் பிரசன்னா. விவசாயிகளான இவர்கள் 3 பேரும், அனகோடு பகுதியில் உள்ள அரை ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தனர். அதில் இஞ்சியை பயிரிட்டிருந்தனர். தற்போது இஞ்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என அவர்கள் மகிழ்ச்சியில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் இருந்து அவர்கள் இஞ்சியை அறுவடை செய்து 2 மூட்டைகளில் கட்டி அங்கேயே வைத்து சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்மநபர்கள் 3 பேர், அங்கு 2 மூட்டைகளில் இருந்த இஞ்சியை திருட முயன்றுள்ளனர்.
3 பேர் கைது
அப்போது ேதவேந்திரா அங்கு வந்துள்ளார். அவரை பார்த்ததும் மர்மநபர்கள் இஞ்சியை திருடிவிட்டு தப்பியோட முயன்றனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த ேதவேந்திரா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களுக்கு தர்மஅடி கொடுத்து உன்சூர் புறநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அனகோடு பகுதியை சேர்ந்த ராஜு, சந்துரு, பைராநாயக் என்பது தெரியவந்தது. கைதான 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.