மணிப்பூர் முதல்-மந்திரியை நீக்கி, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள் - மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்


மணிப்பூர் முதல்-மந்திரியை நீக்கி, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள் - மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்
x

கோப்புப்படம்

மணிப்பூர் முதல்-மந்திரியை நீக்கிவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியான நிலையில், மணிப்பூர் முதல்-மந்திரியை நீக்கிவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

'இந்தியா' கூட்டணி ஆலோசனை

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், கடந்த மே 4-ந்தேதி, 2 பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் கொடுமை நடந்துள்ளது. அதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்து ஆலோசிப்பதற்காக, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில், 26 கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் முதலாவது கூட்டம் நடந்தது.

ஜனாதிபதி ஆட்சி

அந்த கூட்டத்துக்கு பிறகு மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

மணிப்பூரில் இன வன்முறை தொடங்கி சுமார் 80 நாட்கள் ஆகிறது. இருப்பினும், பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை. பிரான்ஸ் செல்வதற்கும், அமெரிக்கா செல்வதற்கும், 38 கட்சிகள் கூட்டத்தை கூட்டுவதற்கும் நேரம் இருக்கிறது. ஆனால், மணிப்பூர் செல்ல நேரம் இல்லை. அதுபற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.

மிகுந்த கொந்தளிப்பு ஏற்பட்ட பிறகு, நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியுள்ளார். மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மணிப்பூர் மாநில முதல்-மந்திரி உடனடியாக நீக்கப்பட வேண்டும். அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மோடி அறிக்கை

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:- 26 கட்சிகளின் கோரிக்கை தெளிவானது. மணிப்பூரில் நடந்த கொடிய நிகழ்வுகள் குறித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு விவாதம் நடத்தப்பட வேண்டும். இதுதான் முதல் பணியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெட்கக்கேடானது

சிவசேனா (உத்தவ் பிரிவு) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ''இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் வெட்கக்கேடானது. பாதிக்கப்பட்ட பெண்களின் குரலாக, நாங்கள் இதை சபையில் எழுப்புவோம். நாடாளுமன்றம் மூலமாக நாட்டுக்கு பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்றார்.

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங், ''பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார். உணர்வுபூர்வமற்ற, கொடூரமான தலைவர் நாட்ைட ஆள்கிறார்'' என்று கூறினார். ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. மனோஜ் ஜா, ''இந்த பிரச்சினையை விவாதிக்காவிட்டால், நாடாளுமன்றம் எதற்கு இருக்கிறது?'' என்று கேட்டார்.


Next Story