தேர்தல் ஆணையத்தில் நடந்து வரும் வழக்கில் ஷிண்டே அணி வெற்றி பெறும்; பட்னாவிஸ் நம்பிக்கை
யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நடந்து வரும் வழக்கில் ஏக்நாத் ஷிண்டே அணி வெற்றி பெறும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை,
அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகிய 2 தரப்பும் பயன்படுத்த முடியாத வகையில் தேர்தல் ஆணையம் வில்,அம்பு சின்னத்தை முடக்கி உள்ளது. மேலும் 2 அணிகளும் வேறு பெயர்களில் செயல்படுமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்தநிலையில் யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நடந்து வரும் வழக்கில் ஏக்நாத் ஷிண்டே அணி வெற்றி பெறும் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் மும்பையில் கூறுகையில், " தேர்தல் ஆணையம் கட்சியின் பெயர், சின்னத்தை ஷிண்டே, உத்தவ் ஆகிய 2 அணிகளும் பயன்படுத்த கூடாது என முடக்கியதில் ஆச்சரியமில்லை. யார் உண்மையான சிவசேனா என தோ்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் போது, அதில் ஏக்நாத் ஷிண்டே தான் வெற்றி பெறுவார். " என்றார்.