வெறுப்பு பேச்சுகளை தடுக்கும் கடமை டி.வி. தொகுப்பாளர்களுக்கு உள்ளது: சுப்ரீம் கோர்ட்டு
தொலைக்காட்சி சேனல்களில் வெறுப்பு பேச்சுகளுக்கு இடம் கொடுக்காமல் பார்த்து கொள்ள வேண்டிய கடமை தொகுப்பாளர்களுக்கு உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று கூறும்போது, தொலைக்காட்சி சேனல் விவாதத்தின்போது, தொகுப்பாளரின் பங்கு அதி முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது பங்கு சிக்கலானதும் கூட. நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்துள்ள நபர்கள் வெறுப்பு பேச்சை உமிழாமல் பார்த்து கொள்ள வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.
எவரேனும் வெறுப்பு பேச்சை தொடங்குகிறார் என்று தெரிந்ததும், தொகுப்பாளர் அந்த நபரை தொடர அனுமதிக்க கூடாது. அதுவே தொகுப்பாளரின் பணியாகும். ஊடகம் அல்லது சமூக ஊடகம் ஆகியவற்றில் வெளிவர கூடிய இதுபோன்ற பேச்சுகள் ஒழுங்குப்படுத்தப்படாமல் உள்ளன என தெரிவித்து உள்ளனர்.
வெறுப்பு பேச்சுகளுக்கு இடம் கொடுக்கும் தொலைக்காட்சி சேனல்கள் எந்தவித தடைகளும் இன்றி தப்பி விடுகின்றன என்றும் அமர்வு தெரிவித்து உள்ளது. இதுபோன்ற விசயங்களில் அரசு ஏன் ஊமையான பார்வையாளராக இருக்கிறது என்றும் சுப்ரீம் கோர்ட்டு சாடியுள்ளது.