இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாக். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களை தடுக்கும் விதமாக ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் திவீர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் பாலக்கோட் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக ஆயுதங்களுடன் 2 பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 2 பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.